செழியனின் "வந்த நாள் முதல்" புத்தகத்தில் சொல்லாமலே மலர்ந்து சொல்லிக் கொள்ளாமலே பிரிந்த காதல் தருணங்களை அழகாக பதிவு செய்திருப்பார் ரம்மியமான புகைப் படங்களுடன்.
"பேருந்துகளில், கோயில்களில், திருமண வீடுகளில், தட்டச்சு வகுப்புகளில்... என ஏதோ ஒரு சந்திப்பில் கண்களால் பேசி, மனதால் கலந்து, கனவுகளால் கனிந்து, மௌனத்தையே சாட்சி வைத்து பிரிந்துபோன காதல் தருணங்கள் யாருக்கு இல்லை..? இப்படி ஒருவருக்கல்ல... ஒரு கோடி காதலர்களுக்கு நேர்வதுதான் செழியனின் இந்தக் காதல் வரிகள். சந்திக்கிறபோது கிடைக்கிற சந்தோஷமும் பிரிகிறபோது பெறுகிற வலிகளும்தான் காதலை இன்னும் வாழ வைத்துக்கொண்டு இருக்கிறது"
என்ற முன்னுரையுடன் தொடங்குகிற இந்த புத்தகத்தை படிக்கும் போது பத்தாம் வகுப்பு படிக்கும் போது எதிர் வீட்டுக்கு திருவிழா காண வந்த மீனாட்சி முதல் சமீபத்திய திருமண நிகழ்வில் கண்களாலேயே கதை பேசி விட்டு, காணாமல் போன தாவணிப் பெண் வரை ஞாபகம் வருவது தவிர்க்க இயலாலது.
ஒரு சின்ன சிரிப்பு,அழகான உதட்டுச் சுழிப்பு அல்லது புருவம் உயரல் இவற்றில் ஏதோ ஒன்றைக் காண்பதற்காக ஆடி மாச எதிர்க் காற்றில் 5 கிலோ மீட்டர் சைக்கிள் மிதித்து அரை மணி நேரம் வியர்வை வழிய காத்திருந்த தருணங்கள் மறக்க முடியாதது.
2002 இல் சென்னை பெரம்பூரில் 29C பஸ்ஸில் வைத்து தற்செயலாக அந்த பெண்ணைப் பார்த்தேன்,அந்த பெண் என்னைப் பார்த்ததையும்.அதன் பின் வந்த ஒவ்வொரு நாளும் அந்த பெண்ணை தேடி தேடி அலைந்து, மூன்று பஸ்ஸை அனுப்பி வைத்து விட்டு,நான்காவது பஸ்ஸில் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டேன்.ஆனால் 29C பஸ்ஸை 29 நாள் சுத்தி வந்தும் அந்த பெண்ணைப் பார்க்க முடியவில்லை.
படித்து முடித்து விட்டு தெண்டச் சோறு சாப்பிட்டு ஊரில் சுற்றிக் கொண்டிருந்த காலத்தில் அந்த "கண்கள் இரண்டால்" ஆரம்பித்தது.படித்துக் கொண்டு இருந்த பெண்ணை காலேஜை விட்டு நிறுத்தி தீடிரென திருமணம் முடித்து கணவன் ஊருக்கு அனுப்பி வைத்து விட்டார்கள் பாவிகள்.அந்த வகையில் இந்திய நாட்டுக்கு ஒரு இயற்பியல் விஞ்ஞானி கிடைக்காமல் போனதற்கு நானே காரணம்.
சவுதியில் இருந்த போது வறண்ட பாலையின் வெப்பத்தை சமாளிக்க அவ்வப் போது மாமா மகளுடன் போன் செய்து பேசுவது வழக்கம்.அவ்வாறான ஒரு நாளில் "மச்சான் என் ஃபிரண்டு உங்க கூட பேசனுமாம்" என்று சொன்ன பத்தாவது நொடி
ஹலோ மச்சான் எப்படி இருக்கீங்க என்றது ஒரு தேன் குரல்
என்னது மச்சானா???? என்றேன் அதிர்ச்சியுடன் நான்
மச்சான்னு கூப்பிடலாம் இல்ல மச்சான்
அதான் கூப்டுட்டியே அப்புறம் இன்னும் என்ன கேள்வி என்றேன்
இவ்வாறாக ஆரம்பித்த அந்த கதை நாளொரு போனும் பொழுதொரு ரீசார்ஜ்மாக வளர்ந்தது.மாமா பெண்ணுடன் 10 நிமிஷமும் அந்த தோழியுடன் 2 நிமிஷமும் என்று ஆரம்பித்த பேச்சு படிப்படியாக தலைகீழாக அதாவது மாமா பெண்ணுடன் 2 நிமிஷமும்,அதன் பின் ரீசார்ஜ் கார்டு தீரும் வரை அல்லது போன் பேட்டரி தீரும் வரை அந்த தோழியுடன் என்பதாக மாறிப் போனது.
மச்சான் எனக்கு அடுத்த மாசம் கல்யாணம்,மாப்பிள்ளை எங்க சொந்தம் தான்,அவசியம் நீங்க வரணும் என்ற தொலை பேசி பேச்சோடு அந்த கதை முடிந்தது.
6 மாதங்களுக்கு முன்பு அறிமுகமான தோழியும் இப்போது "குடும்பத் தோழி"யாகி விட்டாள்,ஆம் அவளுக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக திருமணம் முடிந்து விட்டது.
செழியனின் வந்த நாள் முதலை படிக்கும் போது மேற்கண்ட தோழிகள் எல்லாம் ஞாபகம் வருவார்கள் மாமா பொண்ணைத் தவிர.தூங்குவதற்காக படிக்க ஆரம்பித்து படித்த பின்னர் தூங்க முடியாமல் போன இரவுகள் அவை.
*************************************************************************************************
எனக்கு மட்டும் ஏன் இப்படி?????
எனக்கு கல்யாணமே வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருந்த தோழி முதல் கல்யாணத்துக்கு இப்ப என்ன அவசரம் இன்னும் இரண்டு வருஷம் போகட்டும் இப்ப தான படிப்ப முடிச்சுருக்கா வீட்டு வேலையெல்லாம் கத்துக்கட்டும் என்று சொல்லிக் கொண்டிருந்த தூரத்து மாமாவின் மகள் வரை என்னுடன் பழக ஆரம்பித்த சில மாதங்களில் சீரும் சிறப்புமாக திருமணம் முடிந்து சென்று விடுகிறார்கள்.
அத விட பெரிய கொடுமை.... மேட்ரிமோனியில் "இன்ட்ரஸ்ட்டடு" சொல்லிட்டு ஒரு மாசம் கழிச்சு பார்த்தா அந்த புரபைல்லே இருக்காது.கல்யாணம் பண்ணிட்டு புரபைல்ல டெலிட் பண்ணிட்டு கணவனோடு ஹனிமூன் போயிருக்கும் அந்த புள்ள.
ஆகவே சகலமானவர்களுக்கும் நான் சொல்வது என்னவென்றால்..................................................
அதே தான் தோழி.
8 comments:
maapu onnu puriuthu entha ponnukavathu romba naala kalyanam agalaina ungakooda frienda iruntha antha ponnuku marriage aidum :)
அருமையாக எழுதியிருக்கிறீர்கள்..என் நினைவுகளும் கொஞ்சம் பின்னோக்கி பயணப்பட்டது உண்மையில்...
அதிர்ஸ்டசாலிகளுக்கு இப்படிதான் நடக்கும்.
மிகவும் நேர்த்தியான எழுத்து நடை . கடந்த நிகழ்வுகள் மீண்டும் புதிப்பிக்கப்பட்டது போன்ற ஒரு உணர்வு . பகிர்வுக்கு நன்றி . தொடருங்கள்
மீண்டும் வருவேன் .
நன்றி LK
அதே நண்பா
நன்றி மணிஜீ அண்ணா
நன்றி மஞ்சூர் ராசா
நன்றி பனித்துளி சங்கர்
உங்களுக்கு நல்ல கல்யாண ராசி - சீரும் சிறப்புமாக இருக்கும் அந்த பெண்கள் அனைவரும் உங்களுக்கு நன்றி சொல்லி, ஒரு கோயில் கட்டப் போவதாக செய்தி வந்திருக்குது. ha,ha,ha,ha,ha....
இவ்வாறாக ஆரம்பித்த அந்த கதை நாளொரு போனும் பொழுதொரு ரீசார்ஜ்மாக வளர்ந்தது.
அருமை..அருமை..அருமை..(ரீசார்ஜ்மாக)
ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க.
கருத்துரையிடுக