சித்தர்கள் என்பவர்கள் யார்
வெந்ததைத் தின்றுவிட்டு வேளை வந்தால் சாகின்ற
பிறவி அல்ல---இந்த சீவன்
சர்வம் சிவமயம் சிவாய நமக
பொது வாழ்வு முறை, வழி முறைகளில் இருந்து வேறுபட்ட வாழ்வு, வழி முறைகளை உருவாக்கி சமூகத்துடன் ஒரு முரண்பாடான உறவு வைத்திருப்பவர்கள். சித் - அறிவு, சித்தை உடையவர்கள் சித்தர்கள். அறிவு படைத்தவர்கள் சித்தர்கள்.
சித்தர்கள் மீவியற்கை (supernatural) சக்திகள் உடையவர்கள் என்று சிலர் இயம்புவதுண்டு, எனினும் இவர்கள் உலகாயுத இயல்புகளை சிறப்பாக அறிந்து பயன்படுத்தினர் என்பதுவே தகும். இவர்களின் மருத்துவ, கணித, இரசவாத தத்துவ, இலக்கிய, ஆத்மீக ஈடுபாடுகள் வெளிப்பாடுகள் இவர்களின் உலகாயுத பண்பை எடுத்தியம்புகின்றன. ஆயினும் இவர்கள் வெறும் பொருளியல் வாதிகள் அல்ல. “மெய்ப்புலன் காண்பது அறிவு” என்பதிற்கிணங்க, உண்மை அல்லது நிச நிலை அடைய முயன்றவர்கள் சித்தர்கள்.
சித்தர்களை அடையாளப்படுத்துவதோ, வரையறுப்பதோ கடினம். ஏனென்றால், ஒவ்வொருவரின் தனித்துவமும், மரபை மீறிய போக்குமே சித்தர்களின் வரைவிலக்கணம். தரப்படுத்தலுக்கோ, வகைப்படுத்தலுக்கோ இலகுவில் சித்தர்கள் உட்படுவதில்லை. எனினும், தமிழ் சூழலில், வரலாற்றில் சித்தர்கள் என்பவர்கள் என்றும் இருக்கின்றார்கள்.
சாதி சமயம் சாத்திரம் சடங்குகள் மீறிய உலக நோக்கு, பொது இல்லற துறவற வாழ்முறைகளில் இருந்து வேறுபட்ட வாழ்வு முறைகள். விந்தையான செயல்கள், பட்டறிவு தமிழ், சீரிய ஆராய்ச்சி ஆகிய அம்சங்கள் சித்தர்களை வருணிப்பன எனலாம். அப்படிப்பட்ட மேலோட்டமான வருணிப்புக்களுக்கு மேலாக, சித்தர்கள் என்பவர்கள் சித்தி அடைந்தவர்கள். தங்கள் இருப்பை (existence), உடம்பை, சிந்தையை, சுற்றத்தை, இவ்வுலகின் இயல்பை நோக்கி தெளிவான புரிதலை (understanding), அறநிலை உணர்வை (external awareness), மெய்யடைதலை (actuality) சித்தி எய்தல் எனலாம்.
சித்தர்களை புலவர்கள்,பண்டாரங்கள் பண்டிதர்கள் சன்னியாசிகள் ஆழ்வார்கள் நாயன்மார்கள் ஓதுவார்கள் கலைஞர்கள் கவிஞர்கள் அரசர்கள் மறவர்கள் ஆக்கர்கள் புலமையாளர்கள் அறிவியலாளர்கள் பொது மக்கள்ஆகியோரிடம் இருந்து வேறுபடுத்தி அடையாளப்படுத்தலாம். சித்தர்களின் மரபை, கோயில் வழிபாடு, சாதிய அமைப்பை வலியுறுத்தும் சைவ மரபில்இருந்தும், உடலையும் வாழும்போது முக்தியையும் முன்நிறுத்தாமல் "ஆத்மன்", சம்சாரம் போன்ற எண்ணக்கருக்களை முன்நிறுத்தும் வேதாந்த மரபில் இருந்தும் வேறுபடுத்திப் பார்க்கலாம். இன்று, சித்தர் மரபு அறிவியல் வழிமுறைகளுடன்ஒத்து ஆராயப்படுகின்றது. எனினும், சித்தர் மரபை தனி அறிவியல் கண்ணோட்டத்தில் பார்ப்பது அதன் பரந்த வெளிப்படுத்தலை, அது வெளிப்படுத்திய சூழலை புறக்கணித்து குறுகிய ஆய்வுக்கு இட்டு செல்லும். சித்தர்களின் கொள்கை பரமாத்மா எங்கும் தனியாக இல்லை. நமது உடம்பு தான் பரமாத்மாவின் இடம் ஆதலால் கடவுளைத்தேடி எங்கும் அலைய வேண்டாம். உடம்பைப் பேணுவதே கடவுட்பணி, உடம்பினுள்ளேயே பரமாத்மாவைக் கண்டு மகிழ்ந்திரு என்பது சித்தர் கொள்கை.
சரி சித்தர்களை காண்போமா
முதலில் பதினெட்டு சித்தர்களின் பட்டியல்களை பார்ப்போமே
1. திருமூலர். 2. போகர் 3. கருவூர்சித்தர் 4. புலிப்பாணி 5. கொங்கணர் 6. மச்சமுனி 7. வல்லப சித்தர் என்னும் சுந்தரானந்தர் - மதுரை. 8. சட்டைமுனி சித்தர் 9. அகத்தியர் 10. தேரையர் 11. கோரக்கர் 12. பாம்பாட்டி சித்தர் 13. சிவவாக்கியர் 14. உரோமரிசி 15. காகபுசுண்டர். 16. இடைக்காட்டுச் சித்தர் 17. குதம்ப்பைச் சித்தர் 18. பதஞ்சலி சித்தர்
தி ரு மூ ல ர்
சித்தர்களில் முதன்மையானவர். சிவபெருமானிடமும், நந்தீசரிடமும் உபதேசம் பெற்றவர். அஷ்ட்டமா சித்திகள் அனைத்தும் கைவரப்பெற்றவர். இவர் அகத்தியரிடம் கொண்ட அன்பால் அவருடன் சிலகாலம் தங்குவதற்கு எண்ணி, தான் வாழ்ந்த திருக்கைலையிலிருந்து புறப்பட்டு பொதிகை மலையை அடையும் பொருட்டு தென் திசை நோக்கிச் சென்றார்.
செல்லும் வழியில் திக்கேதாரம், பசுபதி, நேபாளம், அவிமுத்தம் (காசி) விந்தமலை, திருப்பருப்பதம், திருக்காளத்தி, த்ருவாலங்காடு, காஞ்சி ஆகிய திருத்தலங்களைத் தரிசித்து ஆங்காங்கே இருந்த சிவயோகிகளைக் கண்டு அளவளாவி மகிழ்ந்தார்.
பிறகு தில்லையில் இறைவன் அற்புதத் திருக்கூத்தாடியருளும் திருநடனம் கண்டு மகிழ்ந்த சிவயோகியார், திருவாவடுதுறை இறைவனை வழிபட்டுச் செல்லும் போது காவிரிக் கரையிலுள்ள பொழிவினிடத்தே பசுக் கூட்டங்கள் கதறி அழுவதனைக் கண்டார்.
அந்தணர்கள் வாழும் சாத்தனூரிலே ஆநிரை (பசுக்கள் என்று பொருள் கொள்ளவேண்டும், அதனால் தான் நமது தமிழ்நாடு அரசாங்கமும் தனது பால் உற்பத்திக்கு “ஆவின் பால்” என்று பெயர் வைத்தது). மேய்க்கும் ஆயனாகிய மூலன் என்பவன் அங்கு தனியே வந்து பசுக்களை மேய்ப்பவன். அவன் தன் விதி முடிந்த காரணத்தால் உயிர் நீங்கி இறந்து கிடந்தான். மூலன் இறந்ததைக் கண்ட பசுக்கள் அவனது உடம்பினைச் சுற்றிச் சுற்றி வந்து வருந்தி கண்ணீர் விட்டன.
பசுக்களின் துயர்கண்ட சிவயோகியார்க்கு அவற்றின் துன்பம் துடைக்க எண்ணம் உண்டாயிற்று. எனவே தம்முடைய உடலை மறைவான இடத்தில் கிடத்திவிட்டு, கூடு விட்டு கூடு பாய்தல் (பரகாயப் பிரவேசம்) என்னும் பவன வழியினாலே தமது உயிரை அந்த இடையனது உடம்பினுள் புகுமாறு செலுத்தித் திருமூலராய் எழுந்தார்.
மூலன் எழுந்ததைக் கண்ட பசுக்கள் மகிழ்ந்து அன்பினால் அவரது உடலினை நக்கி, மோந்து, களிப்போடு துள்ளிக் குதித்தன. திருமூலர் மனம் மகிழ்ந்து பசுக்களை நன்றாக மேய்த்தருளினார். வயிரார மேய்ந்த அப்பசுக்கள் காவிரியாற்றின் துறையிலே இறங்கி தண்ணீர் பருகி கரையேறி சாத்தனூரை நோக்கி நடந்தன. அவற்றைத் தொடர்ந்து சென்ற சிவயோகியார் பசுக்கள் தத்தம் வீடுகளுக்குச் சென்றதைக் கண்டார். அதே சமயம் வீட்டிலிருந்து வெளியே வந்த மூலனின் மனைவி, மூலன் வடிவிலிருந்த சிவயோகியரை வீட்டிற்கு அழைத்தாள். திருமூலரோ தான் அவளுடைய கணவன் அல்லன் என்றும், அவன் இறந்துவிட்டான் என்றும் கூறினார். அவள் அவ்வூர்ப் பெரியவர்களிடம் முறையிடவும், மூலர் தான் ஏற்றிருந்த உடலிலிருந்து விலகி தன் ஒரு சிவயோகியார் என்பதை நிருபித்தார். மறுபடியும் மூலனின் உடம்பில் புகுந்தார். இதைக்கண்ட சான்றோர்கள் மூலனின் மனைவியைத் தேற்றி ஆறுதல் கூறிவிட்டு சென்றனர்.
சிவயோகியர் தன் உடலைத் தேடிச் சென்று அது கிடைக்காததால் மூலனின் உடலிலேயே தங்கி திருவாவடுதுறைத் திருக்கோவிலை அடைந்தார். யோகத்தில் வீற்ற்ருந்து, நன்னெறிகளை விளக்கும் ‘திருமந்திரம்’ எனும் நூலை ஓராண்டுக்கு ஒரு பாடலாக மூவாயிரம் பாடல்களைப் பாடியருளினார். திருமூலர் திருமந்திரத்தில் மூன்று அதிமுக்கியமான வாக்கியங்களை, இன்றளவும் நாம் பயன்படுத்தும் விதமாக அருள்ளியுள்ளார், அவையாவன
1) ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
2) யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்
3) அன்பே சிவம்
ஆகியவைகளே ஆகும்.
திருமந்திரத்தில் ஐந்து கரத்தினை என்று தொடங்கும் விநாயகர் வணக்க பாடல் தற்காலத்தில் தான் திருமூலர் திருமந்திரம் நூலில் சேர்க்கப்பட்டது, அவர் காலத்தில் சைவம் என்று கொண்டால் சிவனை அன்றி வேறொரு தெய்வத்தை வைத்து எந்த ஒரு காரியங்களையும், இலக்கியங்களையும், நூல்களையும் தொண்டங்கியது இல்லை. விநாயகரின் வழிபாடு பிற்காலத்தில் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான சிறுத்தொண்டர் என்று போற்றபடுகிற பரஞ்சோதி என்கிற மன்னன் வாதாபி வரை சென்று அங்கு போரிலே வெற்றி கொண்டு அந்த பிராந்தியத்திலே அவர்கள் வணங்கும் தெய்வமாகிய கணபதியை தமிழகத்துக்கு திரும்பும்பொழுது கொண்டுவந்தார் என்பதும், அப்பொழுது விநாயகரின் வயற்று பகுதி இப்படி தொந்தியாக இல்லாமல் தட்டையாக இருந்தது என்பதற்கு சான்றாக இன்றளவும் ஒன்று திருவாரூர் தியாகேசர் ஆலயத்திலும், மற்றொன்று இங்கலாந்தில் இன்று அருங்காட்சியத்திலும் ஒன்றாக சாட்சி கூறுகிறது.
இவரது திரு நூலுக்கு தமிழ் மூவாயிரம் என்ற பெயரே முதலில் இருந்தது, அந்த நூலில் மிக நிரம்பிய மந்திரங்களும், சில தந்திரங்களும், நம் மனித ஸ்தூல சரீரத்துக்கு தேவையான எல்லாவற்றையும் விளக்கியுள்ளபடியால், பின்னர் அந்த நூல் "திருமூலர் திருமந்திரம்" என்று வழங்கப்பட்டது.
இவரது வரலாற்றை சேக்கிழாரடிகள் பெரியபுராணத்தில் விரிவாகக் அறுபத்து மூவர் பட்டியலிலும் சேர்த்து பெருமைப்படுத்தி கூறியுள்ளார். அகத்தியர், 12 காண்டத்தில் திருமூலர் இயற்றியதாக பின்வரும் சில நூல்கள் பட்டியலிடப்படுகிறது. கிழே கொடுக்கப்பட்டுள்ள பட்டியல் வலைத்தளத்திலிருந்து எடுக்கப்பட்டது
1. திருமூலர் காவியம் (கிரந்தம்) – 80002. திருமூலர் சிற்ப நூல் – 10003. திருமூலர் சோதிடம் – 3004. திருமூலர் மாந்திரிகம் – 6005. திருமூலர் சல்லியம் – 10006. திருமூலர் வைத்திய காவியம் – 10007. திருமூலர் வைத்திய கருக்கிடை – 6008. திருமூலர் வைத்திய சுருக்கம் – 2009. திருமூலர் சூக்கும ஞானம் – 10010. திருமூலர் பெருங்காவியம் – 150011. திருமூலர் தீட்சை விதி – 10012. திருமூலர் கோர்வை விதி – 1613. திருமூலர் தீட்சை விதி – 814. திருமூலர் தீட்சை விதி – 1815. திருமூலர் யோக ஞானம் – 1616. திருமூலர் விதி நூல் – 2417. திருமூலர் ஆறாதாரம் – 6418. திருமூலர் பச்சை நூல் – 2419. திருமூலர் பெருநூல் – 3000
போன்றவைகள் திருமூலரின் 16 சீடர்களில் காலங்கி சித்தரும், கஞ்சமலைச் சித்தரும் முக்கியமானவர்கள்.
திருமூலர் இறுதியாக தில்லை சிதம்பரத்தில் ஜீவ சமாதி எய்தினார், பின்னர் வந்த
பாண்டிய மன்னனின் ஆணைப்படி திருமூலர் சமாதியை மூலவராகக் கொண்டு, கருவூரர் சிதம்பரம் கோயிலை அமைத்தார். திருமூலர் லிங்க வடிவமாக எழுந்தருளிய இடம் சுயம்பு லிங்கமாக எழுந்தருளிய இடமாக கற்பிக்கப்பட்டு உமா பார்வதி என்ற பெயரில் ஒரு அம்மன் சந்நிதியும் இக்கோயிலில் சேர்த்துவிட்டார்கள் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
திருமூலர் வரலாறு நிறைவுற்றது.
சித்துக்கள் தொடரும்............
1 comments:
கருத்துரையிடுக