ஞாயிறு, 29 நவம்பர், 2009
சனி, 28 நவம்பர், 2009
குழந்தை மனது
வெளியே இடி,மின்னலுடன் மழை பெய்து கொண்டு இருந்தது.
கடிகாரத்தை நோக்கினாள் இன்னும் அரை மணி நேரம் இருக்கிறது அலுவலகம் முடிய
நேரமானதும் முதல் ஆளாக வெளியேறினாள் மழைய எதிர் கொள்ள தயாராய்
ரெயின் கோட்டுடன்
மின்னலும் இடியுமாய் நல்ல மழை அதோடு காற்று வேறு மாலதிக்கே பயமாயிருந்து
பார்க்கிங்கை அடைந்து ஹரிணி எப்படி வீட்டுக்கு எப்படி போனாளோ,குழந்தை பயந்து கொள்வாளோ என்று நினைத்துக் கொண்டே தன் ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்தாள்.
வீட்டுக்கு அருகிலேயே பள்ளி இருப்பதால் அவளது மகள் ஹரிணி நடந்தே
சென்று வருவது வழக்கம்
மழைக்காக கடவுளையும் ரோடுக்காக அரசியல்வாதிகளையும் திட்டிக் கொண்டே வீடு இருக்கும் தெருவில் திரும்பினாள்
அங்கு தூரத்தில் ஹரிணி மின்னல் அடிக்கும் போது நிற்பதும் பின்பு நடப்பதுமாய் மழையில் நனைந்து கொண்டே சென்று கொண்டிருந்தாள்,ரெயின் கோட்டை வேறு தலையில் இருந்து நீக்கியிருந்தாள்
நனையாதே என்று சொன்னாள் கேட்பதே இல்லை என்று மனதுக்குள் திட்டிக் கொண்டே அவளை நெருங்கி என்ன பண்றே ஹரிணி எதுக்கு நின்னு நின்னு போறே என்று அதட்டினாள்
இல்லம்மா வானத்துல இருந்து யாரோ போட்டோ எடுக்கிறாங்க அதான்மா என்றாள் முகம் கொள்ளாப் புன்னகையுடன்.
சித்தர்கள் வரலாறு - போகர்
இவ்வரலாறு செய்திகளனைத்தும் சதுரகிரி தலபுராணத்தை விளக்கும் புத்தகத்திலிருந்து படித்து அதிலிருந்து சாற்றை எடுத்து கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இதற்க்கு பேருதவியாக இருந்த சக்தி விகடனில் தொடராக வந்த "சதுரகிரி யாத்திரை" என்பதிலிருந்தும் பல குறிப்புக்களை எடுத்துக்கொண்டேன்.
அகஸ்திய முனிவர் தமது சௌமிய சாகரத்தில் போகரை சீன தேசத்தவர் என்று கூறுகிறார். காலங்கியின் சீடர் சித்தர்களில் முதன்மையானவர். புலிப்பாணியின் குரு என்றும் இவருடைய தாய் தந்தையர் சீனாவில் பெண்களுக்குத் துணிகள் வெளுத்துக் கொடுத்துப் பிழைத்து வந்தனர் என்றும் அகத்தியர் கூறுகிறார்.
சீன நாட்டிலுள்ள வெள்ளை நிற மக்கள் போரின் மரபு என்பாரகள். உலகத்தில் பதினெட்டு வகையான வெள்ளை மனிதர்கள் உண்டு. அவர்களிலே சீனர்களும் ஒருவகையாவர். போ_யாங் என்ற பெயர் போ_யர் என்று மரியாதை நிமித்தம் அழைக்கப்பட்டு போகர் என்று மருவியிருக்கலாம் என்பதே ஏற்புடையதாகத் தோன்றுகிறது.
போகர் திருமூலர் காலத்தினைச் சேர்ந்தவரென்றும் பழனி மலையில் வசித்து பழனி தண்டபாணி சிலையை நவபாஷானக் கட்டில் தயாரித்தார் என்றும் அவருடைய வரலாறு பேசப்படுகிறது. இன்று நாம் தரிசிக்கும் பழனி (திருஆவினன்குடி) மலை அருள்மிகு தண்டாயுதபாணி முருகனை நவபாஷானங்களால் கட்டி சிலையை வடித்தார், எனவே பழனிக்கு செல்லும் ஒவ்வொரு முறையும் போகரின் சமாதியிலும் சென்று வழிபட்டு நம்மை மேருகேட்ரிக்கொள்ளுவோம்.
போக முனிவர் தமிழில் ஏராளமான நூல்களை இயற்றியிருந்த போதும் அவற்றைவிட அதிகமாக சீன மொழியில் எழுதியுள்ளார்.
போகரின் நூல்கள் யாவுமே அமுதமாகும் என்று காக புஜண்டர் தமது பெருநூல் காவியம் 144வது பாடலில் கூறியுள்ளார். போக சித்தருக்கு 63 சீடர்கள் இருந்தனர்.
இறந்தவர்களைப் பிழைக்க வைக்கும் சஞ்சீவினி மந்திர சக்தியைப் பெற மேருமலையின் அருகிலிருக்கும் நவநாத சித்தர்கள் சமாதியை அடைந்தார். ஒன்பது சித்தர்களும் போகருக்கு தரிசனம் தந்தனர். போகரும் இறந்தவர்களைப் பிழைக்க வைக்கும் சஞ்சீவினி மந்திரவித்தையைக் கற்றுத் தருமாறு கேட்டார். “தகுதியுள்ளவர்களுக்கு காயகல்ப முறையைச் சொல்லிக்கொடு அவர்களை நீண்ட காலம் வாழவை. மரணமடைந்தவர்களுக்காக மனதைக் குழப்பிக் கொள்ளாதே” என்று அறிவுரை கூறினர். அதுவரையில் போகர் அறிந்திராத காய கல்ப முறைகளையும் கற்றுக் கொடுத்து மறைந்தனர்.
போகர் தன் கால் போன போக்கில் நடந்து கொண்டிருந்தார். கொஞ்ச தூரத்தில் ஒரு புற்றிலிருந்து ஒளிக் கற்றை ஒன்று புலப்பட்டது. அந்த ஒளியை தொடர்ந்து புற்றின் முன் போய் நின்றார். யாரோ ஒரு சித்தர் இந்தப் புற்றின் உள்ளே தவம் செய்து கொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்த போகர், அந்தப் புற்றை வலம் வந்து அதன் அருகிலேயே ஆசனம் போட்டு அமர்ந்து கண்களை மூடித் தியானத்தில் ஆழ்ந்தார். நீண்ட நேரம் ஆனது, போகரின் தியானத்தால் புற்றில் இருந்த சித்தரின் தியானம் கலைந்தது. உடனே அவர் புற்றை உடைத்துக் கொண்டு வெளியில் வந்தார்.
போகர், “தங்களை தரிசித்ததில் வாழ்வின் பெரும்பயனை அடைந்தேன்” என்று கூறினார். சித்தர் அங்கிருந்த மரங்களில் ஒன்றைக் காட்டி, அந்த மரத்தின் பழங்களில் ஒன்றைச் சாப்பிட்டால் போதும் ஆயுள் முழுவதும் பசிக்காது, முடி நரைக்காது, பார்வை மங்காது, இவ்வளவு ஏன்? எல்லோருக்கும் அச்சம் தரும் முதுமை என்பதும் வரவே வராது. தவம் செய்பவர்க்கு ஏற்ற துணை செய்யும் என்றார். போகர் அந்தப் பழத்தைச் சாப்பிட்டார். பழத்தின் சுவையில் தன்னையும் மறந்தார்.
சித்தர் புலித்தோல் ஆசனம் ஒன்றைக் கொடுத்து, “இது உனக்கு தவம் செய்ய உதவும்” என்றார். அந்த சமயத்தில் பதுமை ஒன்று அவர் எதிரில் தோன்றவே, இனி உனக்கு தேவையானவைகளை இந்த பதுமை சொல்லும்!” என்று சொல்லிவிட்டு மறுபடியும் தியானத்தில் மூழ்கி விட்டார். பதுமை மூலிகை ரகசியங்கள், போகருக்கு உயிரின் தோற்றம், அது உடல் எடுக்கும் விதம், அந்த உடலில் அது படும் துன்பம் ஆகிய நிலைகளைத் தெளிவாக உணர்த்தியது. அதைக் கேட்டு ஆச்சரியத்தில் இருக்கும் போது பதுமை வந்தது போலவே மறைந்தும் விட்டது.
பொதிகை மலைச்சாரலில் போகர் தங்கியிருந்த போது ஒரு நாள் இரவு உணவு சமைத்து உண்ட பின் நீர் வேட்கையால் அருகிலிருந்த சிற்றூருக்குச் சென்றார். ஒரு வீட்டுத் திண்ணையில் கும்பலாக அந்தணர்கள் அமர்ந்து வேதம் ஓதிக் கொண்டிருந்தனர். போகர் அவர்களிடம் தாகத்திற்கு தண்ணீர் கேட்டார். “யார் நீ! அப்பாலே போ! அருகில் வந்தாலே நாற்றமடிக்கிறது” என்று எரிந்து விழுந்தனர். போகர் அவர்களின் அறியாமையைக் கண்டு அவர்களுக்கு பாடம் புகட்ட நினைத்து அந்த வழியாக வந்த பூனை ஒன்றின் காதில் போகர் வேதத்தை ஓதிவிட்டார். பூனை நன்றாக உட்கார்ந்து கொண்டு உரத்த குரலில் வேதத்தை ஓதத் தொட்ங்கியது.
அந்தணர்கள் தாங்கள் அறியாமல் செய்த அவமதிப்பை பொறுத்தருளும்படி வேண்டினர். “ஐயனே எங்கள் வறுமை அகல தாங்கள் வழி செய்ய வேண்டும்” என்றும் வேண்டிக் கொண்டனர். போகர் அவர்களுடைய வீடுகளில் இருந்த உலோகங்களால் ஆன பொருட்களை எல்லாம் தன்னிடம் இருந்த ஆதி ரசத்தால் (mercury) பொன்னாக மாற்றி அவர்களை மகிழ்வித்தார்.
போகர் தவம் செய்து முடித்த இரச மணிக் குளிகைகளின் ஆற்றல் கண்டு மிகவும் வியப்படைந்தார். அதே போல குளிகைகளைச் செய்து மற்ற சித்தர்களுக்கும் அளிக்க வேண்டுமென்று ஆவல் கொண்டார்.
அதற்காக ரோமாபுரி சென்று மிகத் தூய்மையான ஆதி ரசம் (mercury) கொண்டு வர வேண்டுமென்று நினைத்தார். உடனே குளிகைகளில் ஒன்றை வாயில் போட்டுக் கொண்டு ரோமாபுரியில் தோண்றி அங்கு இருந்த இரசக் கிணற்றைத் தேடிப் பிடித்தார். இரசத்தை சுரைக் குடுவையில் நிரப்பிக் கொண்டு விண்ணில் தாவினார்.
அதன்பிறகு ஆதிரசத்துடன் விண்மார்க்கமாக பொதிகை மலைக்கு வந்து சேர்ந்தார்.
தஞ்சையில் பிரகதீசுவரர் ஆலய லிங்கப் பிரதிஷ்டைக்காக காக்கையின் கழுத்தில் ஓலை ஒன்றை கருவூராருக்கு அனுப்பினார். கருவூரானும் அதன் படியே செய்து லிங்கப் பிரதிட்டை செய்து முடித்தார்.
போகர், தட்சிணா மூர்த்தி உமைக்கு அருளிச் செய்த ஞான விளக்கம் ஏழு சட்சத்தையும் ஏழு காண்டமாக்கி தமது மாணவர்களுக்கு உபதேசித்தார். மற்ற சித்தர்கள், “இறைவன் உபதேசித்ததை வெளியில் சொல்வது குற்றம்” என்று கூறி இத்தகைய செயலை அவர் உடனே நிறுத்தியாக வேண்டும்” என்று தட்சிணாமூர்த்தியிடம் முறையிட்டனர்.
தட்சிணாமூர்த்தி போகரை அழைத்து விசாரிக்க ஆரம்பித்தார். “போகரே! நீர் பூனைக்கு நான்கு வேதங்களையும் உபதேசித்து ஓதச் செய்தீர், சிங்கத்திற்கு ஞானம் கொடுத்து அரசனாக்கினீர், மேருமலைக்குச் சென்று தாதுக்களைக் கொண்டு வந்தீர், ரோமபுரி சென்று ஆதிரசம் கொண்டு வந்தீர், இதையெல்லாம் விட நாம் உமாதேவிக்கு கூறிய தீட்சை விதி, யோக மார்க்கம் எல்லாவற்றையும் ஏழு காண்டமாக உருவாக்கியுள்ளீராமே! நீர் செய்த நூலைச் சொல்வீராக” எனக் கேட்டு போகரின் நூலாழத்தினையும் பொருட்சிறப்பையும் உணர்ந்து மகிழ்ந்து வாழ்த்தினார்.
போகர் பழனி மலையில் கடும் தவத்தில் ஈடுபடத்துவங்கினார். அவருடைய தவத்தின் பயனாக முருகப் பெருமான் அவர்முன் காட்சியளித்தார். அப்பொழுது போகரிடம், முருகப்பெருமான் பழனி மலையில் தன்னை மூலவராக வடிவமைத்து விக்கிரகமாகச் செய்து அதை எப்படி பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்பதையும் கூறி காரியசித்தி உபாயத்தையும் சொல்லி மறைந்தார்.
போகர் கனவில் முருகப்பெருமான் சொன்னபடியே நவபாஷாணம் என்னும் ஒன்பது விதமான கூட்டுப்பொருட்களைக் கொண்டு பழனி ஆண்டவர் தண்டாயுதபாணி சிலையைச் செய்து முடித்து அவர் சொன்ன வண்ணமே பிரதிஷ்டை செய்தார். பழனிமலை இறைவன் திருமேனியைத் தழுவி ஊறி வந்த பஞ்சாமிர்தத்தையே உணவாகக் கொண்டார். ஒன்பது விதமான விஷங்களை (நவ பாஷாணங்கள்) முயன்று கூட்டி உருவாக்கிய திருமேனியில் ஊறிய விபூதியும், பஞ்சாமிர்தமும் போகருக்கு உள்ளொளியைப் பெருக்கியது.
இதே மாதிரியான நவபாஷாண மூர்த்தியான திருச்செங்கோடு அர்த்த நாரீஸ்வரனை உருவாக்கியவரும் போகரே என்றும் கூறுவதுண்டு.
பழனியில் சிலகாலம் வாழ்ந்த போகர் அங்கேயே சமாதியடைந்தார். அவரது சமாதி பழனி ஆண்டவர் ஆலயத்தின் உட்பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் உள்ளது.
போகர் பூசித்து வந்த புவனேச்வரி அம்மையின் திருவுருவம் பழனியாண்டவர் சந்நிதியில் இன்றும் உள்ளது. போகரின் சமாதி அமைந்துள்ள இடத்திற்கும் புவனேச்வரி அம்மன் சந்நதிக்கும் இடையே சுரங்கப் பாதை ஒன்றிருப்பதாக கூறப்படுகிறது.
வலைத்தளத்திலிருந்து எடுக்கப்பட்டது↓
இவர் நவக்கிரகத்தில் செவ்வாய் கிரகத்தைப் பிரதிபலிப்பவர். ஜாதகத்தில் 1,2,4,7,8,12 ஆம் இடத்தில் செவ்வாய் கிரகம் இருந்தால் செவ்வாய் தோஷத்தினால் நிலத்தகராறும், சகோதர சகோதரிகளுக்குள் உட்பூசல்களும் ஏற்பட வாய்ப்பு உண்டு. ஸ்ரீ மகா போகர் பழனி தண்டாயுதபாணியை நவ பாஷானத்தால் உருவாக்கி பிரதிஷ்டை செய்தவர். இவரை வழிபட்டால் செவ்வாய் கிரகத்தின் அருள் கிடைக்கும். செவ்வாய் தோஷத்தினால் திருமணம் ஆகாமல் இருந்தால், திருமணத் தடை நீங்கி நல்ல இடத்தில் திருமணம் நடக்கும்.
பழனி தண்டாயுதபாணியின் அருள் கிடைத்து உடம்பில் உள்ள இரத்த சம்பந்தப்பட்ட நோய்கள் அகலும். புத்திர பாக்கியம் கிடைக்கும்.
இவருக்கு சிவப்பு வஸ்திரம் அணிவித்து அவருக்கு செவ்வரளி புஷ்பங்களால் பூஜை செய்தால் நினைத்த காரியம் நிறைவேறும்.
போகர் வரலாறு முற்றிற்று.
சித்துக்கள் தொடரும்
வியாழன், 26 நவம்பர், 2009
மக்களே லஞ்சத்துக்குப் பழகிவிட்டார்கள்!
''எங்கோ லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டரையும், வி.ஏ.ஓ-வையும் கைது செய்வதால் மட்டுமே லஞ்சத்தை முழுதாக ஒழிக்க முடியாது. இன்று மக்களே லஞ்சத்துக்குப் பழகிவிட்டார்கள். முதலில் இது மாற வேண்டும்!''- உண்மை பேசுகிறார்முன்னாள் மத்திய விஜிலென்ஸ் கமிஷனர் விட்டல். ''ஆயிரம், லட்சங்களில் அளிக்கப்பட்ட லஞ்சம், இன்று சர்வசாதாரணமாக கோடிகளைத் தொட்டுவிட்டது. அதுவும் 100 கோடி, 10 ஆயிரம் கோடிகள்அளவுக்குக் கூட லஞ்சம் தரப்படுகிறது. தேர்தல் நன்கொடை, பிறந்த நாள் பரிசு என விதவிதமான பெயர்களில் கோடிக்கணக்கில் பணம் திரட்டுகின்றனர். இதெல்லாம் யார் அப்பன் வீட்டுப் பணம்? இப்போது தேர்தலே கேலிக் கூத்தாக்கிவிட்டது. வீடு வீடாகச் சென்று லஞ்சம் கொடுத்து ஓட்டுப் போடச் சொல்கிறார்கள். அப்படி வெற்றி பெற்று வருபவர் எப்படி நேர்மையாக இருப்பார்? முதலீடு செய்ததை அதிக லாபத்துடன் அறுவடை செய்யத்தான் பார்ப்பார். உடனே 'அமெரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகளைப் போல் கட்சிகளின் தேர்தல் செலவை அரசே ஏற்க வேண்டும்' என்பார்கள். இது முட்டாள்தனமான வாதம். தேர்தலில் நிற்கும் மோசமான சில அரசியல்வாதிகளுக்காக எதற்கு மக்கள் பணம் செலவழிக்கப்பட வேண்டும்?
'முதலில் லஞ்ச வழக்கில் மாட்டினால் வாழ்க்கையே அவ்வளவுதான்!' என்று மிரளும் அளவுக்குப் பயத்தை ஏற்படுத்த வேண்டும். 1984-ல் நடந்ததாகச் சொல்லப்பட்ட போஃபர்ஸ் ஊழல் வழக்கு இன்று ஒன்றும் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது. அதேபோல்தான் முத்திரைத்தாள் மோசடி வழக்கும். இப்படிப் பல வழக்குகள் ஜவ்வு போன்று இழுத்தடிக்கப்படுகின்றன. லஞ்ச வழக்கில் 100 பேர் கைது செய்யப்பட்டால், அவர்களில் சராசரியாக 6 பேர் மட்டுமே தண்டிக்கப்படுகிறார்கள். இந்த நிலை மாற வேண்டும். சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும். உடனடி விசாரணை, உடனடித் தீர்ப்பு... என்று நீதித் துறை வேகப்படுத்தப்பட வேண்டும். 'சும்மா அரெஸ்ட் பண்ணுவாங்க... கொஞ்ச நாள்ல ஜாமீன்ல வந்துடலாம்' என்ற நிலை மாற்றப்படும் வரை யாருக்கும் பயம் இருக்காது!'' என்கிறார் தடாலடியாக!
-விகடன்
தென்னகத்தில் கட்சியைவிட்டுக் கட்டம் கட்டப்பட்ட பிரமுகர், அண்ணனைப் பார்த்திருக்கிறார். ''26 கோடிக்காகவா என்னை நீக்கணும்? அதை நான் செட்டில் பண்ணிட மாட்டேனா?'' என்ற கேள்வியைக் கேட்டதும் நடுங்கிப் போனார்களாம் அருகில் இருந்தவர்கள்!
-விகடன்
எங்கே செல்லும் இந்த பாதை ......... யாரோ யார் தான் அறிவாரோ.....
சென்னை-பெங்களூரில் குறைந்த விலை பிளாட்டுகள்!
தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் காஸ்மோ சிட்டி எனும் பெயரில் குறைந்த விலையில் பிளாட்டுகள் கட்டித் தரும் திட்டத்தைத் துவங்கியுள்ளது புராவிடன்ட் ஹவுஸிங் லிமிடெட்.
சென்னை பழைய மாமல்லபுரம் சாலையில் உருவாக்கப்படும் காஸ்மோ சிட்டியில் 2 மற்றும் 3பெட்ரூம் பிளாட்டுகளை குறைந்த விலையில் கட்டித் தருகிறது இந்நிறுவனம்.
இதுகுறித்து இந்நிறுவனத்தின் நிர்வாக மேலாளர் ஜெயகர் ஜெரோம் இப்படிக் கூறுகிறார்:
சென்னை மாதிரி பழமையும் பாரம்பரியமும் மிக்க நகரங்களுக்கு ஒரு படுக்கையறை வீடுகள் சரிவராது என்பதால், இரு படுக்கையறை மற்றும் மூன்று படுக்கையறை கொண்ட வீடுகளை கட்டித் தர முடிவு செய்தோம். இவற்றையும்கூட குறைந்த விலையில் இருக்குமாறு கட்டி வருகிறோம்.
பெங்களூரில் ஏற்கெனவே இந்தத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். அங்கு அடுத்த கட்டமாக ஒரு படுக்கையறை கொண்ட வீடுகளைக் கட்டும் திட்டமுள்ளது. இந்த வீடுகள் குறைந்தபட்சம் ரூ.10 லட்சத்திலிருந்து கிடைக்கும். புதிய விமான நிலையத்தையொட்டி இந்த வீடுகள் அமையும்.
பெருநகரங்கள் தவிர, கொச்சி, கோவை போன்ற நகரங்களிலும் இம்மாதிரி குறைந்த விலை வீடுகளைக் கட்டத் திட்டமிட்டுள்ளோம். கோவையில் பெரும்பாலும் தனி வீடுகளைத்தான் விரும்புகிறார்கள். அவர்களையும் வாங்க வைக்கும் விதத்தில் பிளாட்டுகளை அமைக்கத் திட்டமிட்டுள்ளோம், என்றார் ஜெயகர்.
சென்னை, பெங்களூர் போன்ற நகரங்களில் நிலத்தின் மதிப்பு முன்பை விட 30 முதல் 40 சதவிகிதம் வரை குறைந்திருப்பதாக ஜெயகர் குறிப்பிட்டார். - மெய்யாலுமா
பில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ்மென்ட் வீக்கு கதையாயிடாம பார்த்துகோங்க மஹா ஜனங்களே
புதன், 25 நவம்பர், 2009
சித்தர்கள் வரலாறு
சித்தர்கள் என்பவர்கள் யார்
வெந்ததைத் தின்றுவிட்டு வேளை வந்தால் சாகின்ற
பிறவி அல்ல---இந்த சீவன்
சர்வம் சிவமயம் சிவாய நமக
பொது வாழ்வு முறை, வழி முறைகளில் இருந்து வேறுபட்ட வாழ்வு, வழி முறைகளை உருவாக்கி சமூகத்துடன் ஒரு முரண்பாடான உறவு வைத்திருப்பவர்கள். சித் - அறிவு, சித்தை உடையவர்கள் சித்தர்கள். அறிவு படைத்தவர்கள் சித்தர்கள்.
சித்தர்கள் மீவியற்கை (supernatural) சக்திகள் உடையவர்கள் என்று சிலர் இயம்புவதுண்டு, எனினும் இவர்கள் உலகாயுத இயல்புகளை சிறப்பாக அறிந்து பயன்படுத்தினர் என்பதுவே தகும். இவர்களின் மருத்துவ, கணித, இரசவாத தத்துவ, இலக்கிய, ஆத்மீக ஈடுபாடுகள் வெளிப்பாடுகள் இவர்களின் உலகாயுத பண்பை எடுத்தியம்புகின்றன. ஆயினும் இவர்கள் வெறும் பொருளியல் வாதிகள் அல்ல. “மெய்ப்புலன் காண்பது அறிவு” என்பதிற்கிணங்க, உண்மை அல்லது நிச நிலை அடைய முயன்றவர்கள் சித்தர்கள்.
சித்தர்களை அடையாளப்படுத்துவதோ, வரையறுப்பதோ கடினம். ஏனென்றால், ஒவ்வொருவரின் தனித்துவமும், மரபை மீறிய போக்குமே சித்தர்களின் வரைவிலக்கணம். தரப்படுத்தலுக்கோ, வகைப்படுத்தலுக்கோ இலகுவில் சித்தர்கள் உட்படுவதில்லை. எனினும், தமிழ் சூழலில், வரலாற்றில் சித்தர்கள் என்பவர்கள் என்றும் இருக்கின்றார்கள்.
சாதி சமயம் சாத்திரம் சடங்குகள் மீறிய உலக நோக்கு, பொது இல்லற துறவற வாழ்முறைகளில் இருந்து வேறுபட்ட வாழ்வு முறைகள். விந்தையான செயல்கள், பட்டறிவு தமிழ், சீரிய ஆராய்ச்சி ஆகிய அம்சங்கள் சித்தர்களை வருணிப்பன எனலாம். அப்படிப்பட்ட மேலோட்டமான வருணிப்புக்களுக்கு மேலாக, சித்தர்கள் என்பவர்கள் சித்தி அடைந்தவர்கள். தங்கள் இருப்பை (existence), உடம்பை, சிந்தையை, சுற்றத்தை, இவ்வுலகின் இயல்பை நோக்கி தெளிவான புரிதலை (understanding), அறநிலை உணர்வை (external awareness), மெய்யடைதலை (actuality) சித்தி எய்தல் எனலாம்.
சித்தர்களை புலவர்கள்,பண்டாரங்கள் பண்டிதர்கள் சன்னியாசிகள் ஆழ்வார்கள் நாயன்மார்கள் ஓதுவார்கள் கலைஞர்கள் கவிஞர்கள் அரசர்கள் மறவர்கள் ஆக்கர்கள் புலமையாளர்கள் அறிவியலாளர்கள் பொது மக்கள்ஆகியோரிடம் இருந்து வேறுபடுத்தி அடையாளப்படுத்தலாம். சித்தர்களின் மரபை, கோயில் வழிபாடு, சாதிய அமைப்பை வலியுறுத்தும் சைவ மரபில்இருந்தும், உடலையும் வாழும்போது முக்தியையும் முன்நிறுத்தாமல் "ஆத்மன்", சம்சாரம் போன்ற எண்ணக்கருக்களை முன்நிறுத்தும் வேதாந்த மரபில் இருந்தும் வேறுபடுத்திப் பார்க்கலாம். இன்று, சித்தர் மரபு அறிவியல் வழிமுறைகளுடன்ஒத்து ஆராயப்படுகின்றது. எனினும், சித்தர் மரபை தனி அறிவியல் கண்ணோட்டத்தில் பார்ப்பது அதன் பரந்த வெளிப்படுத்தலை, அது வெளிப்படுத்திய சூழலை புறக்கணித்து குறுகிய ஆய்வுக்கு இட்டு செல்லும். சித்தர்களின் கொள்கை பரமாத்மா எங்கும் தனியாக இல்லை. நமது உடம்பு தான் பரமாத்மாவின் இடம் ஆதலால் கடவுளைத்தேடி எங்கும் அலைய வேண்டாம். உடம்பைப் பேணுவதே கடவுட்பணி, உடம்பினுள்ளேயே பரமாத்மாவைக் கண்டு மகிழ்ந்திரு என்பது சித்தர் கொள்கை.
சரி சித்தர்களை காண்போமா
முதலில் பதினெட்டு சித்தர்களின் பட்டியல்களை பார்ப்போமே
1. திருமூலர். 2. போகர் 3. கருவூர்சித்தர் 4. புலிப்பாணி 5. கொங்கணர் 6. மச்சமுனி 7. வல்லப சித்தர் என்னும் சுந்தரானந்தர் - மதுரை. 8. சட்டைமுனி சித்தர் 9. அகத்தியர் 10. தேரையர் 11. கோரக்கர் 12. பாம்பாட்டி சித்தர் 13. சிவவாக்கியர் 14. உரோமரிசி 15. காகபுசுண்டர். 16. இடைக்காட்டுச் சித்தர் 17. குதம்ப்பைச் சித்தர் 18. பதஞ்சலி சித்தர்
தி ரு மூ ல ர்
சித்தர்களில் முதன்மையானவர். சிவபெருமானிடமும், நந்தீசரிடமும் உபதேசம் பெற்றவர். அஷ்ட்டமா சித்திகள் அனைத்தும் கைவரப்பெற்றவர். இவர் அகத்தியரிடம் கொண்ட அன்பால் அவருடன் சிலகாலம் தங்குவதற்கு எண்ணி, தான் வாழ்ந்த திருக்கைலையிலிருந்து புறப்பட்டு பொதிகை மலையை அடையும் பொருட்டு தென் திசை நோக்கிச் சென்றார்.
செல்லும் வழியில் திக்கேதாரம், பசுபதி, நேபாளம், அவிமுத்தம் (காசி) விந்தமலை, திருப்பருப்பதம், திருக்காளத்தி, த்ருவாலங்காடு, காஞ்சி ஆகிய திருத்தலங்களைத் தரிசித்து ஆங்காங்கே இருந்த சிவயோகிகளைக் கண்டு அளவளாவி மகிழ்ந்தார்.
பிறகு தில்லையில் இறைவன் அற்புதத் திருக்கூத்தாடியருளும் திருநடனம் கண்டு மகிழ்ந்த சிவயோகியார், திருவாவடுதுறை இறைவனை வழிபட்டுச் செல்லும் போது காவிரிக் கரையிலுள்ள பொழிவினிடத்தே பசுக் கூட்டங்கள் கதறி அழுவதனைக் கண்டார்.
அந்தணர்கள் வாழும் சாத்தனூரிலே ஆநிரை (பசுக்கள் என்று பொருள் கொள்ளவேண்டும், அதனால் தான் நமது தமிழ்நாடு அரசாங்கமும் தனது பால் உற்பத்திக்கு “ஆவின் பால்” என்று பெயர் வைத்தது). மேய்க்கும் ஆயனாகிய மூலன் என்பவன் அங்கு தனியே வந்து பசுக்களை மேய்ப்பவன். அவன் தன் விதி முடிந்த காரணத்தால் உயிர் நீங்கி இறந்து கிடந்தான். மூலன் இறந்ததைக் கண்ட பசுக்கள் அவனது உடம்பினைச் சுற்றிச் சுற்றி வந்து வருந்தி கண்ணீர் விட்டன.
பசுக்களின் துயர்கண்ட சிவயோகியார்க்கு அவற்றின் துன்பம் துடைக்க எண்ணம் உண்டாயிற்று. எனவே தம்முடைய உடலை மறைவான இடத்தில் கிடத்திவிட்டு, கூடு விட்டு கூடு பாய்தல் (பரகாயப் பிரவேசம்) என்னும் பவன வழியினாலே தமது உயிரை அந்த இடையனது உடம்பினுள் புகுமாறு செலுத்தித் திருமூலராய் எழுந்தார்.
மூலன் எழுந்ததைக் கண்ட பசுக்கள் மகிழ்ந்து அன்பினால் அவரது உடலினை நக்கி, மோந்து, களிப்போடு துள்ளிக் குதித்தன. திருமூலர் மனம் மகிழ்ந்து பசுக்களை நன்றாக மேய்த்தருளினார். வயிரார மேய்ந்த அப்பசுக்கள் காவிரியாற்றின் துறையிலே இறங்கி தண்ணீர் பருகி கரையேறி சாத்தனூரை நோக்கி நடந்தன. அவற்றைத் தொடர்ந்து சென்ற சிவயோகியார் பசுக்கள் தத்தம் வீடுகளுக்குச் சென்றதைக் கண்டார். அதே சமயம் வீட்டிலிருந்து வெளியே வந்த மூலனின் மனைவி, மூலன் வடிவிலிருந்த சிவயோகியரை வீட்டிற்கு அழைத்தாள். திருமூலரோ தான் அவளுடைய கணவன் அல்லன் என்றும், அவன் இறந்துவிட்டான் என்றும் கூறினார். அவள் அவ்வூர்ப் பெரியவர்களிடம் முறையிடவும், மூலர் தான் ஏற்றிருந்த உடலிலிருந்து விலகி தன் ஒரு சிவயோகியார் என்பதை நிருபித்தார். மறுபடியும் மூலனின் உடம்பில் புகுந்தார். இதைக்கண்ட சான்றோர்கள் மூலனின் மனைவியைத் தேற்றி ஆறுதல் கூறிவிட்டு சென்றனர்.
சிவயோகியர் தன் உடலைத் தேடிச் சென்று அது கிடைக்காததால் மூலனின் உடலிலேயே தங்கி திருவாவடுதுறைத் திருக்கோவிலை அடைந்தார். யோகத்தில் வீற்ற்ருந்து, நன்னெறிகளை விளக்கும் ‘திருமந்திரம்’ எனும் நூலை ஓராண்டுக்கு ஒரு பாடலாக மூவாயிரம் பாடல்களைப் பாடியருளினார். திருமூலர் திருமந்திரத்தில் மூன்று அதிமுக்கியமான வாக்கியங்களை, இன்றளவும் நாம் பயன்படுத்தும் விதமாக அருள்ளியுள்ளார், அவையாவன
1) ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
2) யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்
3) அன்பே சிவம்
ஆகியவைகளே ஆகும்.
திருமந்திரத்தில் ஐந்து கரத்தினை என்று தொடங்கும் விநாயகர் வணக்க பாடல் தற்காலத்தில் தான் திருமூலர் திருமந்திரம் நூலில் சேர்க்கப்பட்டது, அவர் காலத்தில் சைவம் என்று கொண்டால் சிவனை அன்றி வேறொரு தெய்வத்தை வைத்து எந்த ஒரு காரியங்களையும், இலக்கியங்களையும், நூல்களையும் தொண்டங்கியது இல்லை. விநாயகரின் வழிபாடு பிற்காலத்தில் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான சிறுத்தொண்டர் என்று போற்றபடுகிற பரஞ்சோதி என்கிற மன்னன் வாதாபி வரை சென்று அங்கு போரிலே வெற்றி கொண்டு அந்த பிராந்தியத்திலே அவர்கள் வணங்கும் தெய்வமாகிய கணபதியை தமிழகத்துக்கு திரும்பும்பொழுது கொண்டுவந்தார் என்பதும், அப்பொழுது விநாயகரின் வயற்று பகுதி இப்படி தொந்தியாக இல்லாமல் தட்டையாக இருந்தது என்பதற்கு சான்றாக இன்றளவும் ஒன்று திருவாரூர் தியாகேசர் ஆலயத்திலும், மற்றொன்று இங்கலாந்தில் இன்று அருங்காட்சியத்திலும் ஒன்றாக சாட்சி கூறுகிறது.
இவரது திரு நூலுக்கு தமிழ் மூவாயிரம் என்ற பெயரே முதலில் இருந்தது, அந்த நூலில் மிக நிரம்பிய மந்திரங்களும், சில தந்திரங்களும், நம் மனித ஸ்தூல சரீரத்துக்கு தேவையான எல்லாவற்றையும் விளக்கியுள்ளபடியால், பின்னர் அந்த நூல் "திருமூலர் திருமந்திரம்" என்று வழங்கப்பட்டது.
இவரது வரலாற்றை சேக்கிழாரடிகள் பெரியபுராணத்தில் விரிவாகக் அறுபத்து மூவர் பட்டியலிலும் சேர்த்து பெருமைப்படுத்தி கூறியுள்ளார். அகத்தியர், 12 காண்டத்தில் திருமூலர் இயற்றியதாக பின்வரும் சில நூல்கள் பட்டியலிடப்படுகிறது. கிழே கொடுக்கப்பட்டுள்ள பட்டியல் வலைத்தளத்திலிருந்து எடுக்கப்பட்டது
1. திருமூலர் காவியம் (கிரந்தம்) – 80002. திருமூலர் சிற்ப நூல் – 10003. திருமூலர் சோதிடம் – 3004. திருமூலர் மாந்திரிகம் – 6005. திருமூலர் சல்லியம் – 10006. திருமூலர் வைத்திய காவியம் – 10007. திருமூலர் வைத்திய கருக்கிடை – 6008. திருமூலர் வைத்திய சுருக்கம் – 2009. திருமூலர் சூக்கும ஞானம் – 10010. திருமூலர் பெருங்காவியம் – 150011. திருமூலர் தீட்சை விதி – 10012. திருமூலர் கோர்வை விதி – 1613. திருமூலர் தீட்சை விதி – 814. திருமூலர் தீட்சை விதி – 1815. திருமூலர் யோக ஞானம் – 1616. திருமூலர் விதி நூல் – 2417. திருமூலர் ஆறாதாரம் – 6418. திருமூலர் பச்சை நூல் – 2419. திருமூலர் பெருநூல் – 3000
போன்றவைகள் திருமூலரின் 16 சீடர்களில் காலங்கி சித்தரும், கஞ்சமலைச் சித்தரும் முக்கியமானவர்கள்.
திருமூலர் இறுதியாக தில்லை சிதம்பரத்தில் ஜீவ சமாதி எய்தினார், பின்னர் வந்த
பாண்டிய மன்னனின் ஆணைப்படி திருமூலர் சமாதியை மூலவராகக் கொண்டு, கருவூரர் சிதம்பரம் கோயிலை அமைத்தார். திருமூலர் லிங்க வடிவமாக எழுந்தருளிய இடம் சுயம்பு லிங்கமாக எழுந்தருளிய இடமாக கற்பிக்கப்பட்டு உமா பார்வதி என்ற பெயரில் ஒரு அம்மன் சந்நிதியும் இக்கோயிலில் சேர்த்துவிட்டார்கள் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
திருமூலர் வரலாறு நிறைவுற்றது.
சித்துக்கள் தொடரும்............
என் இனிய பெரும் குடி மக்களே
என்ன நடக்கிறது நம் தமிழகத்துலே
ஒரு காலத்தில் நம் தமிழகம் குடிமக்களின் சொர்க்க பூமியாய் இருந்தது கொடுத்த காசுக்கு எவ்வளவு பிராண்ட்கள் Old Monk ,Cardinal , MC அப்பப்பா அதையெல்லாம் எண்ணி பார்க்கையிலே ஐயோகோ நான் என்ன செய்வேன் என் தொண்டை தட தடக்கிறது மண்டை கிடு கிடுக்கிறது
ஆனால் இன்று என்ன நடக்கிறது இங்கே .......
மற்ற மாநிலங்களிலே "நல்ல" சரக்கை "கள்ள" மார்க்கெட்டில் விக்குறாங்க ஆனால் இங்கே "கள்ள" சரக்கை "நல்ல" மார்க்கெட்டில் விக்குறாங்க என்ன கொடுமை அய்யா இது
தமிழர் என்றொரு இனம் உண்டு தனியே அவற்கொரு குணம் உண்டு என்று வாழ்ந்தவர்கள் நாம் நம்மை போய் ?????
இன்றும் இளைனர்களின் நாடி நரம்புகளை எல்லாம் சுண்ட வைக்கற அளவு என்னால் பேச
முடியும் ஆனால் விதி ???
கொஞ்ச காலமாக நல்ல சரக்கே அடிக்காதிதில் என் நாடி நரம்புகள் எல்லாம் தளர்ந்து விட்டது
கடைசியாக ஒரு செகேச்லோவேகியா நாட்டு கவிதை
வெளியே மழை
வேடிக்கை பார்க்க ஜன்னல்
ஓல்ட் மங் குவார்ட்டர்
செல்வம் எலுமிச்சை ஊருகாய்
இது போதுமடி எனக்கு
இத்துடன் என் உரையை முடித்து கொள்கிறேன் நன்றி
