படித்ததில் பிடித்தது
விளையாட்டு, வேடிக்கை என்று எதுவுமில்லாமல் டி.வி, கணிணி, வீடியோ கேம்ஸ் என்று கதியாய் கிடக்கும் இன்றைய குழந்தைகளின் பால்யம், வண்ணம் இல்லாமல் வெளுத்துக்கொண்டே வருகிறது என்று கவலைப் படும் அம்மாக்களுக்காக
அதற்கான பாஸிட்டிவ் பின்னூட்டமாக எழுதுகிறேன் இதை!
திருமணம் முடித்து வெளிநாட்டில் வசிக்கும் எனக்கு, என் குழந்தையின் பிள்ளைப் பருவத்தை நூறு சதவிகிதம் உயிர்ப்பானதாக ஆக்க வேண்டுமென்று ஆசை. பள்ளி, வீடு, ஹோம் வொர்க், மீண்டும் பள்ளி என்று நான் பார்த்த சில குழந்தைகளின் உலகம், 'நம்ம குழந்தையும் இப்படித்தான் மெக்கானிக்கலா ஆயிடுமா..?' என்று எனக்கு ஏற்படுத்திய பயம்தான் அந்த ஆசைக்கு வித்து.
சரி... அதற்கு என்னவெல்லாம் செய்யலாம்..? அவனின் ஒன்றரை வயதில் இருந்தே அவனுக்கு கதைகள் சொல்ல ஆரம்பித்தேன். இப்போது ஐந்து வயதாகும் அவன், "அம்மா... ஏதாச்சும் புது கதை சொல்லுங்க..." என்று தினமும் என்னைச் சுற்றுகிறான். சொல்லும் கதைகளை கண்கள் உருட்டி உள்வாங்குகிறான். அரசர் கதைகள் மட்டுமல்ல... அவன் தாத்தா, பாட்டியின் வாழ்க்கை, என் பால்யம், அவன் அப்பாவின் கல்லூரிக் காலம் என்று அனைத்தையும் கதையாக அவனுக்கு கடத்துகிறேன்.
கிரிக்கெட், ஃபுட்பால், பேஸ்கட் பால், செஸ், லூடோ, கண்ணாமூச்சி, ஓடிப் பிடித்து என... இவையெல்லாம் நானும் அவனும் விளையாடும் விளையாட்டுகள். "அம்மா போதும்... நாளைக்கு விளையாடலாம்" என்று அவன் ஆசை தீரும் வரை, சலிக்க மாட்டேன் நான்.
இருவரும் ஒன்றாகத்தான் டி.வி. பார்ப்போம். கார்ட்டூன், காமெடி, அனிமல் பிளானட், படம் என்று என்ன பார்த்தாலும், அதன் தொடர்பான விஷயங்களை பகிர்ந்து கொண்டேதான் பார்ப்போம்.
வீட்டுத் தோட்டச் தொட்டிகளில் முளைத்து வரும் குட்டி குட்டி செடிகளை, "இது உன் பொறுப்பு. டெய்லி நீதான் தண்ணி ஊத்தி பார்த்துக்கணும்..." என்று அவனிடம் சொல்ல, "அம்மா... புது லீஃப் வந்துடுச்சு...", "மொட்டு விட்டிடுச்சும்மா...", "ஃபர்ஸ்ட் பூவை நான் பறிச்சு சாமிக்கு வைக்கறேம்மா..." என்று தினம் தினம் ஒரு உற்சாகக் குரலோடு தோட்டத்தில் இருந்து ஓடி வருகிறான், சந்தோஷத்தை அள்ளிக்கொண்டு.
குழந்தையிலிருந்தே அவனது கிறுக்கல்கள், வரைந்த படங்கள், படித்த பாட புத்தகம் என்று எல்லாவற்றையும் பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறேன்... அவன் வளர்ந்த பின் அவனிடம் காட்டி இருவரும் மகிழ!
'பிள்ளைகளுக்கு பால்யம் இல்லையே, அவர்கள் விளையாட நண்பர்கள் இல்லையே' என்று கவலைப் படுவதைவிட, பெற்றோர்கள் நாமே அவர்களுக்கு நல்ல நண்பர்களாக இருக்க முடியும்தானே? அது நமக்கும் குழந்தைக்குமான பிணைப்பை, புரிதலை இன்னும் வலுவாக்கும்தானே?!
குழந்தையுடன் விளையாடுங்கள்... குழந்தையாக விளையாடுங்கள்!
- ரேணுகா சிவா
நன்றி அவள் விகடன்
வியாழன், 13 மே, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
2 comments:
//குழந்தையுடன் விளையாடுங்கள்... குழந்தையாக விளையாடுங்கள்!///
இதுதான் வேண்டும்... குழந்தை வளர்ப்பில் அம்மாக்களிம் பங்கு ரெம்ப முக்கியம்..
பகிர்வுக்கு நன்றி கரிசல்
நல்ல பகிர்வு கரிசல்.
கருத்துரையிடுக