புளிச்சக்கை
சில்வர் தட்டுகளுக்கு
விம் பவுடர்
வெள்ளிப் பாத்திரங்களுக்கு
விபூதி மட்டும்
பளபளவென
விளக்கிவைக்கும்
அம்மாவால்
கடைசிவரை
விளக்கவே முடியவில்லை
அப்பாவிடம் தன் மனசை!
---------ஜீவி
நான் வேலைக்காக சென்னை செல்லப் போகிறேன் என்று சொல்லி விட்டு அம்மாவைப் பார்க்க அவள் முகத்தில் சந்தோஷம் கண்களில் கண்ணீர்,அதற்கான காரணம் நானறிவேன் இருந்தாலும் போயாக வேண்டுமே...அப்பா தன் நண்பரொருவர் மூலம் ஏற்பாடு செய்த வேலையில் சேர.அப்பாவைப் பொறுத்தவரை இது ஒரு அடுத்த கட்டம் பள்ளிப் படிப்பு,கல்லூரி படிப்பு போல அவ்வளவே
உடன் பிறந்தவர்கள் யாருமில்லாத வீட்டில் அம்மாவுக்கு நானே எல்லாமுமாகியிருந்தேன்,கடைக்கு உடன் செல்லும் நண்பனாக,தன் மனக் குமுறல்களை கொட்டும் தோழியாக,வீட்டு வேலைகளில் உதவும் உதவியாளாக.
அம்மா கல்லூரியில் படிக்கும் போது வாங்கிய சான்றிதழ்களைப் பார்த்திருக்கிறேன்.படிப்பு முடிந்தவுடன் திருமணம் ஆனது, திருமணத்திற்கு பிறகு வேலைக்கு போக கூடாது என்ற நிபந்தனையுடன்.சான்றிதழ்கெல்லாம் தூங்கி கொண்டிருக்கிறது பரணில்.வருடம் ஒரு முறை பொங்கலுக்கு வெள்ளை அடிக்கும் போது மட்டும் எடுத்து பார்த்து விட்டு வைத்து விடுவாள்.
அம்மாவுக்கு நன்றாக ஓவியம் வரைய தெரியும் என்று அம்மா சொல்லக் கேட்டிருக்கிறேன்.எங்கே காட்டும்மா என கேட்ட போது,பெரு மூச்சுடன் எல்லாம் எரிந்து விட்டதென்றாள்.ஒருமுறை அப்பா அலுவலக கோபத்துடன் வீட்டிற்கு வந்த போது அம்மா தான் தீட்டிய ஓவியம் ஒன்றுக்கு வண்ணம் அடித்து கொண்டிருந்திருக்கிறாள்.அலுவகத்தில் தன் கௌரவத்தை நிலை நாட்ட முடியாமல் கோபத்திலிருந்த அப்பா அம்மாவிடம் காட்டிய கோபத்தில் அவள் அதுவரை வரைந்த படங்களெல்லாம் தீக்கிரையானது.அது மட்டுமில்லாமல் புருஷன் வெளிய போய்ட்டு வந்தா ஒரு வாய் தண்ணி கூட குடுக்காம என்ன பண்ணிக்குட்டு இருக்கே நீ ஒன்ன தாலி கட்டி கூட்டிட்டு வந்தது குடும்பம் நடத்த தான் படம் வரையரதுக்கு இல்ல என தெருவுக்கே கேட்கும் படியான் அவர் கத்திய கத்தலால் அரண்டு போனவள் அன்றிலிருந்து ஒவியம் வரைவதை நிறுத்தி விட்டாள்.தானுன்டு தன் வேலையுண்டு என்றாகி விட்டாள்.அநாவசியமாக வெளியில் கூட செல்வதில்லை.கோயிலுக்கோ,கடைக்கோ போக வேண்டுமென்றால் என்னைக் கூட்டிக் கொள்வாள்.
எனக்கு ஒவியம் வரையும் திறமை எங்கிருந்து வந்தது,அம்மா எதற்காக ஒவியத்திற்காக பணம் கேட்கும் போதெல்லாம் இல்லை என்று சொல்லாமல் கொடுக்கிறாள் என்ற ரகசியங்கள் அன்று தான் தெரிந்தது.
அம்மாவை அப்பா வெளியில் அழைத்து சென்றதாக நினைவில்லை.சொந்தகாரர்களின் நிகழ்வுகளுக்கு கூட தனியாகத் தான் சென்று வருவார் சில சமயங்கள் நான் கூட செல்வேன்.வந்தவுடன் யார் யார் வந்திருந்தார்கள்,உங்க பெரியத்தை பொண்ணு எப்படியிருக்கா,சித்தி பையன் வளந்துட்டானா என ஆர்வமாக விசாரிப்பாள்.22 வருட குடித்தனத்திற்கு பிறகும் அப்பா அம்மாவை புரிந்து கொள்ளவில்லை என்றே எனக்கு தோன்றும்.அது பற்றி அம்மாவிடம் கேட்கும் போதெல்லாம் புன்னைகைத்து கொண்டே நகர்ந்து விடுவாள்.
தம்பி நீ கல்யாணம் பண்ணினால் வரப் போகும் பெண்ணை அவள் விருப்ப படி இருக்க அனுமதிக்க வேண்டும் என என்னிடம் அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பாள்.
நான் சென்னை செல்லும் நாளில் முதல் முறையாக அப்பா அம்மாவை ரயில் நிலையத்திற்கு அழைத்து வந்திருந்தார் என்னை வழி அனுப்ப.
அம்மாவின் கண்களில் என்னை தனியே அனுப்புகிறோம் என்ற வலியையும் மீறி ஒரு சந்தோசமே எனக்கு தெரிந்தது.
வண்டி ஏறினேன் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் கையசைத்தபடி.
8 comments:
அருமையான புனைவு கரிசல் காரன்.
அதிலும் அந்த கவிதையின் கடைசி வரிகள் ரொம்ப ரொம்ப டச்சிங்.
வாழ்த்துக்கள்.
பாத்திரத்திற்கு ஏற்ப பவுடர் மாற்றும் அம்மா
அப்பாவுக்கு ஏற்ற பவுடர் போட்டிருக்கலாம்
என் அம்மாவும் அப்படித்தான்.என் பிள்ளையின் அம்மாவும் அப்படித்தான்.
சென்னைக்கு அனுப்பிய அம்மா,சும்மாவா
அருமை..எனக்கு ரொம்ப பிடிச்சுது..
@தராசு
@மோகன்
@தண்டோரா
நன்றிகள் உங்கள் ஊக்கத்திற்கு
ரொம்பக் கஷ்டம்தான்
அழகான எழுத்துக்கள். உங்களைப்போல் என்னால் எழுத முடியாது. ஆனால்
நானும் கதை எழுதுகிறேன். படித்துவிட்டு சொல்லுங்கள் http://eluthuvathukarthick.wordpress.com/ .
உங்கள் விமர்சனத்தை எதிர்ப்பார்க்கிறேன்.
//உழவன் " " Uzhavan " கூறியது...
ரொம்பக் கஷ்டம்தான்//
என்ன கஷ்டம் நண்பரே
@Karthick
வருகைக்கு நன்றிகள்
//நானும் கதை எழுதுகிறேன். படித்துவிட்டு சொல்லுங்கள் //
கண்டிப்பாக
கருத்துரையிடுக