ஏரு... சோறு... காரு... நம்பிக்கை தரும் நாமக்கல் உழவர் சந்தை!
நம்பிக்கை தரும் நாமக்கல் உழவர் சந்தை! நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த உழைக்கும் விவசாயிகள், கஷ்டப்பட்டு விளைவித்தப் பொருட்களை இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக விற்பனை செய்யத்தான் உழவர் சந்தைகள். இது ஓரளவு விவசாயிகளுக்குக் கைக்கொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில், 'விளையும் பொருட்களை அப்படியே விற்பதோடு நின்றுவிடாமல், மதிப்புக் கூட்டி விற்றால் கூடுதல் வருமானம் கிடைக்குமே' என்றபடி நாமக்கல் உழவர் சந்தையில் 'உழவன் உணவகம்' என்பதைத் தொடங்கியிருக்கிறார் மாவட்ட ஆட்சித்தலைவர் சகாயம். முழுக்க விவசாயிகளால் நடத்தப்படும் இந்த உணவகங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கவே, மாவட்டம் முழுவதும் உள்ள உழவர் சந்தைகளிலும் இதை ஆரம்பிக்கும் வேலைகள் நடக்கின்றன.
காலையில் காய்கறி விற்பனை, மாலையில் உணவகம் என எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கிறது நாமக்கல் உழவர் சந்தை. வெறும் உணவாக மட்டுமல்லாமல், ஊட்டச்சத்து நிறைந்த நமது பாரம்பர்ய உணவுகள், மிகவும் குறைந்த விலையில் இங்கே கிடைக்கும் என்பதுதான் உழவன் உணவகத்தின் சிறப்பே. கம்புதோசை, தினைப் பாயாசம், தினைஉப்புமா, முருங்கைசூப், ராகி இட்லி, ராகிதோசை, வெஜிடபிள் சூப், காளான் சூப், மிளகுத்தக்காளி சூப், சோளக் குழிபனியாரம் என விதவிதமான உணவுகளை ருசி பார்த்த மக்கள் கூட்டம், நாளுக்கு நாள் கூடிக்கொண்டே இருக்கிறது.
இங்கே உணவகம் நடத்த விரும்பும் விவசாயிகளுக்கு சிறப்பு அடையாள அட்டை வழஙகப்படுகிறது. அதைப் பெற்றுக் கொண்டு சுற்றுவட்டார விவசாயிகள் தங்களுக்குத் தெரிந்த உணவுகளை சமைத்து விற்பனை செய்கின்றனர். அவர்களில் ஒருவரான எர்ணாபுரம் வெண்ணிலா, ''தினமும் 1,500 ரூபாயிலிருந்து 2,000 ரூபாய் வரைக்கும் வியாபாரமாகுது. தினசரி 500 ரூபாய் வரைக்கும் லாபமா கிடைக்குது.
கடைக்குத் தேவையான மாவு, இன்னும் மத்த பொருளுங்களை தினமும் எங்க ஊர்ல இருந்து வாடகைக்கு ஆட்டோ பிடிச்சுதான் நாமக்கல்லுக்குக் கொண்டு வந்துகிட்டிருந்தேன். வாடகை மட்டுமே மாசத்துக்கு ரெண்டாயிரம் ரூபாய். இப்ப, இதுக்காகவே சொந்தமா ஒரு மாருதி கார் வாங்கியிருக்கேன். எல்லாம் இந்த உணவகத்துல சம்பாதிச்ச காசுலதான்'' என்றவரின் முகத்தில் பெருமை பொங்கி வழிந்தது.
இதைப் பற்றி நம்மிடம் பேசிய நாமக்கல் துணை வேளாண்மை அலுவலர் சோமு, இங்கு விவசாயிகளால் விற்பனை செய்யப்படும் பாரம்பர்ய உணவுகளால் ஈர்க்கப்பட்ட சுற்றுவட்டார மக்கள், அதிக அளவில் இங்கு வந்து சாப்பிட்டுச் செல்கின்றனர். சுற்று வட்டார விவசாயிகள் தாங்கள் தயார் செய்த உணவு வகைகளை எல்லோரும் வாங்கும் விதமாக குறைந்த விலையில் விற்றாலும், நாளன்றுக்கு சுமார் 300 முதல் 350 ரூபாய் வரை வருமானம் பெறுகிறார்கள்.
இன்றைக்கெல்லாம் ஒரு உணவகத்துக்குள் நுழைந்தால்... குறைந்தது 100 ரூபாய் இல்லாமல் திருப்தியான உணவைச் சாப்பிட முடியாத நிலையில்... 15, 20 ரூபாய்க்குள் இங்கு சத்தான உணவுகளைச் சாப்பிடலாம்.
'ஆட்டுக்கால் கிழங்கு' என்று ஒரு வகை கிழங்கு கொல்லிமலையில் பரவலாகக் காணப்படுகிறது. (ஆட்டின் கால் போன்று வடிவம் இருக்கும்) இந்தக் கிழங்கை சூப் செய்து விவசாயிகள் விற்கின்றனர். இது... மூட்டுவலி, உடல் உபாதை, உடல் சூடு, போன்ற பல வகையான நோய்களைப் போக்கும்.
இப்படி ஆரோக்கியத்தை அடிப்படையாக கொண்ட உணவு வகைகள், சுவையாக கிடைப்பதால்... கூட்டம் அதிகமாக வருகிறது. விவசாயிகளுக்கும் கூடுதல் லாபம் கிடைக்கிறது'' என்று சொன்னார்.
மாவட்ட ஆட்சித் தலைவர் சகாயம் பேசும்போது, “விவசாயம் லாபகரமான தொழிலாக இல்லை என்பதால், ஆயிரக்கணக்கான விவசாயிகள் நகரத்தை நோக்கி நகர்ந்தபடி இருக்கிறார்கள். விளைவிக்கும் பொருட்களை மதிப்புக்கூட்டியப் பொருளாக மாற்றினால்தான் விவசாயிகளின் வாழ்வு மேம்படும். அதன் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டதுதான் உழவன் உணவகம். இங்கு மொத்தம் 15 கடைகள் இருக்கிறது. ஆரம்பித்து ஐந்து மாதத்தில் 52 லட்சம் ரூபாய் வரை இங்கு உணவுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் இது போன்று தொடங்கினால் விவசாயிகள் வேலையும், நல்ல வருமானமும் பெறுவார்கள்'' என்று ஆலோசனை சொன்னார்
-நன்றி பசுமை விகடன்
6 comments:
நல்ல ஆரோக்கியமான செய்தி. ஐ.ஏ. எஸ் எல்லாம் அரசியல்வாதிகளின் எடுபிடியாக அடிமைகளாக இருக்கவேண்டிய சூழ்நிலையில், இதையாவது செய்வோமே என்று செயல்பட்டுள்ள மாவட்ட ஆட்சி தலைவருக்கு பாராட்டுக்கள்.
இப்படி இருக்க எப்படி போராட வேண்டும் தெரியுமா அவர். கொடுத்து வைத்தவர்கள் நாமக்கல் மக்கள்
நல்லா இருக்கீங்களா .... ABUDHABI லயா இல்ல ஊர்லயா
நன்றி பெயரில்லா
நன்றி வானம்பாடிகள்
//இப்படி இருக்க எப்படி போராட வேண்டும் தெரியுமா அவர்.//
உண்மை ஐயா
@shabi
சென்னைல இருக்கேன் 27 ந் தேதி அபுதாபி வருவேன்
பாராட்டுக்குரிய கலெக்டர்.
தகவலுக்கு நன்றி கரிசல்.
ஆட்சியருக்கு வாழ்த்துக்கள்.
கார்த்திக்.
புதிய தொடர் என் வலை பூவில். படியுங்கள். கருத்தை பகிருங்கள்.
http://eluthuvathukarthick.wordpress.com/
கருத்துரையிடுக